×

கூட்டுறவு சங்கங்களுக்கு ₹148 கோடி மானியம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர்கள் சங்கம் நன்றி

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சு.வெங்கடாசலபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் துறையின் கூட்டுறவு சங்கங்கள் 32 ஆயிரத்திற்கு மேற்பட்ட நியாய விலை கடைகள் நடத்தி வருகிறது. இதில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதன் ஊழியர்களுக்கு ஊதியம் பணிக்கால பயன்கள், கடை வாடகை, லாரி வாடகை போன்ற செலவினங்களுக்கு ஆண்டுதோறும் அரசு மானியம் வழங்கி வருகிறது.  இதன்படி  தமிழகம்  முழுவதும் அந்தந்த மண்டல இணைப் பதிவாளர்கள் பரிந்துரையின்படி நியாய விலைக்கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு 2018-19ம் ஆண்டிற்கு ₹398 கோடி அரசு வழங்க வேண்டியதில் நவம்பர் 2020ல் ₹250 கோடி வழங்கப்பட்டது. மீதி ₹148 கோடி வழங்க வேண்டிய நிலுவை இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள அரசு ஆணையின்படி நிலுவையில் இருந்த ₹148 கோடி கூட்டுறவு சங்கங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னைக்கு ₹10 கோடி, கோயம்புத்தூர் ₹8 கோடி, மதுரை ₹6 கோடி, திண்டுக்கல் ₹6 கோடி, சேலம் ₹6 கோடி, திருச்சி ₹4 கோடி, திருநெல்வேலி ₹3 கோடி, திருவண்ணாமலை ₹6 கோடி, விருதுநகர் ₹3 கோடி, காஞ்சிபுரம் ₹6 கோடி, ஈரோடு ₹6 கோடி, சிவகங்கை ₹4 கோடி, கன்னியாகுமரி ₹1 கோடி என 33 மாவட்டங்களுக்கு ₹148 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கூட்டுறவு சங்கங்களுக்கு ₹148 கோடி மானியம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர்கள் சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Tags : G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Co-operative School Employees Union ,State General Secretary ,Suu. Venkatasalapathy ,B.C. ,Stalin ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்